ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய மருது சகோதரர்கள் 1801ம் ஆண்டில் இதே நாளில் தூக்கிலிடப்பட்டனர். அவர்களின் வீரம் மற்றும் தியாகத்தை போற்றும் வகையில் நினைவு தினம் அரசு விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு சார்பில் கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில், மருது பாண்டியர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களின் திருவுருவச் சிலைகளுக்கும் அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் மலர் தூவி

மரியாதை செலுத்தினர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவு: மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் "சிவகங்கைச் சீமையின் வீரத்துக்கு எடுத்துக்காட்டாக இம்மண்ணில் நிலைத்திருக்கும் மருது சகோதரர்கள் நினைவு நாள். ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடும் உணர்வை அந்நாளிலேயே விதைத்து, தலை சிறந்த தியாகிகளாகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மருதிருவரின் நினைவை என்றும் போற்றுவோம்! இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு முன்னோடியாகத் தமிழர்கள் முன்னின்று உயிர் நீத்த வரலாற்றைத் தொடர்ந்து சொல்லுவோம்!” என்று தெரிவித்துள்ளார்.